1. சகோதரர்களே, அவர்கள் மீட்படைய வேண்டுமென்றே, என் உள்ளம் தவிக்கிறது. அதற்காகவே நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்.
2. கடவுள்மேல் அவர்களுக்கு அன்பார்வம் உண்டு என்பதற்கு நான் சாட்சி சொல்லமுடியும்; ஆனால் அந்த ஆர்வம் உண்மையான அறிவுக்கு ஏற்றதாயில்லை.
3. கடவுளின் திரு அருட் செயல்முறையை அவர்கள் அறிந்து கொள்ளாமல், அருள் பெறுவதற்குத் தங்கள் முறையையே நிலைநாட்டத் தேடினார்கள்; ஆகவே கடவுளுடைய அருட் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை.
4. ஏனெனில், கிறிஸ்துவே திருச்சட்டத்தின் முடிவும் நிறைவும்; ஆகவே விசுவசிக்கும் எவனும் இனி இறைவனுக்கு ஏற்புடையவனாவான்.
5. திருச்சட்டத்தால் ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆதல் பற்றி மோயீசன் எழுதும்போது, "திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவனே அவருக்கு ஏற்புடையவனாக வாழ்வான்" என்றார்.
6. ஆனால் விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவனாதல் பற்றி மறைநூலில் உள்ள சான்று பின்வருமாறு: ' வானகத்திற்கு ஏறுபவன் யார் என்று நீ மனத்தில் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை.' - அதாவது, கிறிஸ்துவைக் கீழே கொண்டுவருவதற்கு என்க - அல்லது
7. கீழ் உலகுக்கு இறங்குபவன் யார் என்று நீ நினைக்கவேண்டியதில்லை' - அதாவது கிறிஸ்துவை இறந்தோரிடமிருந்து கொண்டு வருவதற்கு என்க- மாறாக, சொல்லியிருப்பது என்ன?
8. 'உன்னருகிலேயே உள்ளது வார்த்தை உன் வாயில் உள்ளது உன் உள்ளத்திலேயே உள்ளது'.
9. அந்த வார்த்தை நாங்கள் அறிவிக்கிற விசுவாச அறிக்கையே. ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால், நீ மீட்புப் பெறுவாய்.
10. ஆம், உள்ளத்தால் விசுவாசிப்பவன் இறைவனுக்கு ஏற்புடையவனாவான்; வாயினால் அறிக்கையிடுகிறவன், மீட்புப் பெறுவான்.
11. ஏனெனில், 'அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவனும் ஏமாற்றம் அடையான் ' என்பது மறைநூல் வாக்கு.
12. யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, வேறுபாடில்லை; அனைவர்க்கும் ஆண்டவர் ஒருவரே அவரை நோக்கி மன்றாடுவோர் யாவர்க்கும் வள்ளன்மையுடையவர்.
13. ' ஆண்டவருடைய பெயரைச் சொல்லி மன்றாடுபவன் எவனாயினும் அவன் மீட்புப்பெறுவான் ' என்று எழுதியுள்ளதன்றோ?
14. ஆனால் தாங்கள் விசுவசியாத ஒருவரை நோக்கி எவ்வாறு மன்றாடுவர்? தாங்கள் கேள்வியுறாத ஒருவரை எவ்வாறு விசுவசிப்பர்? அறிவிப்பவன் இல்லையெனில், எவ்வாறு கேள்வியுறுவர்?
15. அனுப்பப்படாமல் எவ்வாறு அறிவிப்பர்? இதைப்பற்றியே ' நற்செய்தி அறிவிப்பவர்களின் மலரடிகள் எத்துணை அழகானவை!' என எழுதியுள்ளது.
16. ஆயினும் எல்லாருமே நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஏனெனில், இசையாஸ், " ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்?" என்று முறையிடுகிறார்.
17. அப்படியானால், அறிவிப்பதைக் கேட்பதால் தான் விசுவாசம் உண்டாகிறது என்பது தெளிவு; நாங்கள் அறிவிப்பதற்கோ கிறிஸ்துவின் வார்த்தையே ஊற்று.
18. ஆனால் ஒருவேளை அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்லமுடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ' அவர்கள் குரலொலி மண்ணுலகெங்கும் பரவிற்று, அவர்கள் வார்த்தை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று.
19. ஆனால், இஸ்ராயேல் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண், ' இனம் அல்லாத இனத்தின் மேல் நீங்கள் பொறாமைப்படச் செய்வேன், அறிவில்லாத மக்களைப் பார்த்து நீங்கள் எரிச்சல் கொள்ளச் செய்வேன் ' என்று மோயீசன் சொல்லுகிறார்.
20. அடுத்து, 'தேடாதவர்கள் என்னைக் கண்டடைந்தார்கள். என் விருப்பத்தை அறிய என்னை நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன் ' என்று இசையால் கூறத் துணிகிறார்.
21. ஆனால் இஸ்ராயேலரிடம், எனக்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்க மக்கள் பால் நான் நாள் முழுவதும் என் கைகளை நீட்டி அழைத்தேன் என்று சொல்லுகிறார்.

Roman Catholic தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save