1. அவர் படகேறி அக்கரை சென்று தம் சொந்த ஊரையடைந்தார்.
2. இதோ! திமிர்வாதக்காரன் ஒருவனைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டுவந்தனர். இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
3. அப்போது மறைநூல் அறிஞர் சிலர், "இவர் கடவுளைத் தூஷிக்கிறார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டனர்.
4. இயேசு, அவர்கள் சிந்தனைகளை அறிந்து கூறியதாவது:
5. "உங்கள் உள்ளங்களில் தீயன சிந்திப்பானேன் ? எது எளிது ? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா ?
6. எழுந்து நட என்பதா? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு" - திமிர்வாதக்காரனை நோக்கி - "எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
7. அவன் எழுந்து தன் வீடு சென்றான்.
8. இதைக் கண்ட மக்கட்கூட்டம் அஞ்சி, இத்தகைய வல்லமையை மனிதருக்கு அளித்த கடவுளை மகிமைப்படுத்திற்று.
9. இயேசு அங்கிருந்து போகையில், மத்தேயு என்ற ஒருவர் சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி, "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.
10. பின், அவர் வீட்டில் இயேசு பந்தியமர்ந்திருக்கையில் இதோ! ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.
11. இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.
12. இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.
13. ' பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
14. அப்பொழுது அருளப்பருடைய சீடர்கள் அவரிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.
15. இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும், அவன் தோழர்கள் துக்கம் கொண்டாடலாமா ? மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்; அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.
16. பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும்; கிழியலும் பெரிதாகும்.
17. புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ்சித்தைகளில் ஊற்றி வைப்பதில்லை. வைத்தால் சித்தைகள் வெடிக்கும்; இரசம் சிந்திப்போகும்; சித்தைகளும் பாழாகும். ஆனால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் கெடாமலிருக்கும்" என்றார்.
18. அவர்களுடன் இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, தலைவன் ஒருவன் அவரை அணுகிப் பணிந்து, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்; ஆயினும் நீர் வந்து அவள்மீது உமது கையை வையும்; அவள் உயிர் பெறுவாள்" என்றான்.
19. இயேசு எழுந்து தம் சீடர்களோடு அவன் பின்னே சென்றார்.
20. இதோ! பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி பின்புறமாக வந்து, அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.
21. "நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.
22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து, "மகளே, தைரியமாயிரு; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரமுதல் அவள் குணமாயிருந்தாள்.
23. இயேசு, தலைவன் வீட்டுக்கு வந்தபோது, தாரை ஊதுவோரையும், சந்தடி செய்யும் கூட்டத்தையும் கண்டு,
24. "விலகிப்போங்கள்; சிறுமி சாகவில்லை; தூங்குகிறாள்" என்றார்.
25. அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். கும்பலை வெளியேற்றிவிட்டு, அவர் உள்ளே சென்று, அவள் கையைப் பிடிக்கவே, சிறுமி எழுந்தாள்.
26. இச்செய்தி அந்நாடெங்கும் பரவிற்று.
27. இயேசு அங்கிருந்து போகையில், இரு குருடர் அவரைப் பின்தொடர்ந்து, "தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்" என்று கூவினர்.
28. அவர் வீடு வந்து சேர்ந்ததும், குருடர் அவரிடம் வர, இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு நான் இதைச் செய்ய முடியும் என விசுவசிக்கிறீர்களா ?" என்றார்.
29. "ஆம், ஆண்டவரே" என்றனர். பின் அவர் அவர்களுடைய கண்களைத் தொட்டு "உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகட்டும்" என்றார்.
30. அவர்களுடைய கண்கள் திறந்தன. "இது யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
31. அவர்களோ வெளியே போய் அவரைப்பற்றி நாடெங்கும் பேசலாயினர்.
32. அவர்கள் சென்றபின், இதோ! பேய்பிடித்த ஊமையன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தனர்.
33. அவர் பேயை ஓட்ட, ஊமையன் பேசினான். மக்கட்கூட்டம் வியப்புற்று, "இப்படி ஒருகாலும் இஸ்ராயேலில் கண்டதில்லை" என்றது.
34. பரிசேயரோ, "இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
35. இயேசு, நகரங்கள், ஊர்கள் எல்லாம் சுற்றி வந்து, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, நோய் பிணியெல்லாம் குணமாக்கி வந்தார்.
36. அவர் மக்கட்கூட்டத்தைக் கண்டு, அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், அவர்கள்மேல் மனமிரங்கினார்.
37. அப்பொழுது அவர் தம் சீடர்களை நோக்கி, "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு.
38. ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்றார்.

Roman Catholic தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save