1. யோசியாசின் மகனான யோவாக்கீம் என்கிற யூதா அரசனுடைய ஆட்சியின் துவக்கத்தில் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு இதுவே:
2. ஆண்டவர் கூறுகிறார்: நீ ஆண்டவருடைய கோயிலின் முற்றத்தில் நின்று கொண்டு, ஆண்டவருடைய கோயிலில் ஆராதனை செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரங்களின் மக்களுக்கும், நாம் சொல்லக் கட்டளையிட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் அறிவி; ஒரு வார்த்தையும் விடாமல் அனைத்தையும் அறிவி.
3. ஒரு வேளை உன் சொற்களுக்கு அவர்கள் செவிசாய்த்துத் தத்தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம்; அப்பொழுது அவர்களுடைய தீய செயல்களுக்கு நாம் தண்டனை தர எண்ணியதற்காக மனம் வருந்துவோம்;
4. நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் நாம் சொல்வதைக் கேளாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் சட்டத்தைக் கடைபிடிக்காமலும்,
5. நாம் உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியும் நீங்கள் செவிமடுக்காமற் போன நம்முடைய ஊழியர்களான இறைவாக்கினர்களின் வார்த்தைகளைக் கேட்காமலும் போவீர்களாகில்,
6. இந்தக் கோயிலைச் சீலோவைப்போல் ஆக்கிவிடுவோம்; இந்த நகரத்தை உலகத்தின் எல்லா மக்களினத்தார் முன்னிலையிலும் ஒரு சாபமாக்குவோம்."
7. அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும் மக்கள் எல்லாரும், எரெமியாஸ் ஆண்டவரின் கோயிலில் அறிவித்த இவ்வார்த்தைகளைக் கேட்டார்கள்.
8. மக்கள் அனைவருக்கும் சொல்லும்படியாக ஆண்டவர் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் எரெமியாஸ் சொல்லி முடித்தவுடன், அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும் மக்கட் கூட்டம் முழுவதும் அவரைப் பிடித்து, "நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்;
9. இந்தக் கோயில் சீலோவைப் போலாகும், இந்நகரம் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்' என்று ஆண்டவர் திருப்பெயரால் நீ ஏன் இறைவாக்குரைத்தாய்?" என்று சொல்லி, ஆண்டவரின் கோயிலிலேயே மக்கள் எல்லாரும் எரெமியாசைச் சூழ்ந்து கொண்டார்கள்.
10. யூதாவின் தலைவர்கள் இதெல்லாம் கேள்விப்பட்டு, அரசன் அரண்மனையிலிருந்து ஆண்டவரின் கோயிலுக்கு வந்து, அங்கே ஆண்டவரின் கோயிலில் 'புதிய வாயில்' என்னும் வாயிலில் உட்கார்ந்தனர்.
11. அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும், தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, "இந்த மனிதன் சாவுக்குத் தீர்ப்பிடப் படவேண்டும்; ஏனெனில் இந்தப் பட்டணத்திற்கு விரோதமாய் இவன் இறைவாக்கு உரைத்தான்; நீங்களோ உங்கள் காதால் கேட்டீர்கள்" என்றார்கள்.
12. அப்போது எரெமியாஸ் தலைவர்கள் அனைவரையும் மக்கட் கூட்டம் முழுவதையும் நோக்கி: "இந்தக் கோயிலுக்கும் இந்நகரத்திற்கும் எதிராக நீங்கள் கேட்ட வார்த்தைகளையெல்லாம் அறிவித்து இறைவாக்கு உரைக்கும்படி ஆண்டவர் தாம் என்னை அனுப்பினார்.
13. ஆதலால், இப்பொழுது உங்கள் நெறிகளையும் செயல்களையும் செவ்வைப்படுத்திக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவ்வாறு செய்தால், ஆண்டவர் உங்களுக்கு விரோதமாய்த் தீமை செய்வதாக அறிவித்ததற்கு மனம் வருந்துவார்.
14. இதோ, நான் உங்கள் கைகளில் இருக்கிறேன்; நல்லதென்றும் நீதியென்றும் உங்களுக்குத் தோன்றுவதை எனக்குச் செய்யுங்கள்.
15. ஆனால், ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்: என்னை நீங்கள் கொல்லுவீர்களாகில், மாசற்றவனின் இரத்தப் பழியை உங்கள் மேலும் இப்பட்டணத்தின் மேலும் இதன் குடிகள் மேலும் விழச் செய்வீர்கள்; ஏனெனில் உண்மையில் ஆண்டவர் தாம் என்னை உங்களிடம் அனுப்பி இவ்வார்த்தைகளை எல்லாம் நீங்கள் கேட்கும்படி சொல்லச் சொன்னார்" என்றார்.
16. தலைவர்களும் மக்கட் கூட்டமும், அர்ச்சகர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி, "இந்த மனிதன் சாவுக்குத் தீர்ப்பிடப்படக் கூடாது; ஏனெனில் அவன் நம் கடவுளாகிய ஆண்டவர் திருப்பெயராலேயே நம்மிடம் பேசினான்" என்றார்கள்.
17. அப்போது நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து அங்கே கூடியிருந்த மக்களனைவரையும் பார்த்து,
18. யூதாவின் அரசனாயிருந்த எசேக்கியாசின் நாட்களில் மோராஸ்தி ஊரினரான மிக்கேயாஸ் இறைவாக்கினராய் இருந்தார்; அவர் யூதாவின் மக்களனைவரையும் நோக்கி, 'சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு: சீயோன் கழனி போல் உழப்படும், யெருசலேம் கற்குவியலாகும், கோயிலிருக்கும் இம்மலையோ பெருங் காடாகும்' என்று சொன்னர்.
19. இதற்காக யூதாவின் அரசனான எசெக்கியாசும், யூதா நாடு முழுவதும் அவரைச் சாவுக்குத் தீர்ப்பிட்டு விட்டார்களா? (அதற்கு மாறாக) அவர்கள் ஆண்டவருக்கு அஞ்சி, ஆண்டவருடைய அருளை இறைஞ்சி மன்றாடினார்கள் அல்லவா? ஆண்டவரும் அவர்களுக்கு விரோதமாய் அறிவித்திருந்த தீமையைச் செய்யாமல், மனத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? ஆனால் நாமே நம்மேல் பெருந் தீமையை வருவித்துக் கொள்ளப் போகிறோம்" என்று சொன்னார்கள்.
20. ஆண்டவர் திருப்பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் காரியாத்தியாரிம் என்னும் ஊரில் வாழ்ந்த செமியின் மகனான ஊரியாஸ் என்பவர்; அவரும் எரெமியாஸ் சொன்ன வார்த்தைகளைப் போலவே சொல்லி, இப்பட்டணத்திற்கும் இந்நாட்டுக்கும் விரோதமாய் இறைவாக்கு உரைத்தார்.
21. யோவாக்கீம் அரசனும் தலைவர்களும் போர் வீரர்கள் அனைவரும், அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டார்கள்; அரசன் அவரைக் கொல்லத் தேடினான்; ஆனால் ஊரியாஸ் அதைக் கேட்டு அஞ்சி, எகிப்துக்குத் தப்பியோடினார்;
22. யோவாக்கீம் அரசன் அக்கோபோர் என்பவனின் மகன் எல்நாத்தானையும், அவனோடு வேறு சிலரையும் எகிப்துக்கு அனுப்பினான்;
23. அவர்கள் எகிப்திலிருந்து ஊரியாசைப் பிடித்து வந்து யோவாக்கீம் அரசன் முன் விட்டார்கள்; அவன் அவரை வாளால் கொன்று உடலைப் பொது மக்கள் புதைக்கப்படும் இடத்திலே எறிந்து விட்டான்.
24. மக்கள் கையில் விடப்பட்டுச் சாகாதபடி சாப்பானின் மகன் ஆயிகாம் எரெமியாசுக்குத் துணையாய் இருந்தான்.

Roman Catholic தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save