1. தீவுகளே, என் முன் மௌனமாயிருங்கள், மக்களினங்கள் வலிமையைப் புதுப்பிக்கட்டும்; அருகில் நெருங்கி வந்து பேசட்டும்; வழக்காட ஒருங்கே நாம் நெருங்கி வருவோம்.
2. செல்லுமிடமெல்லாம் வெற்றி எதிர்கொள்ளும் வீரரைக் கீழ்த்திசையில் எழுப்பியவர் யார்? அவருக்கு மக்களினங்களைக் கையளித்து, அரசர்களை அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவருடைய வாள் அவர்களை தவிடு பொடியாக்குகிறது, அவரது வில் அவர்களைப் புயலில் அகப்பட்ட வைக்கோலைப் போலச் சிதைக்கிறது.
3. அவர்களைத் துரத்திச் செல்கிறார், கலக்கமின்றித் தம் வழியில் முன்னேறுகிறார், அவருடைய அடிச்சுவடுகள் வழியில் காணப்படா.
4. இவற்றையெல்லாம் செயல்படுத்தி முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்து தலைமுறைகளை அழைத்தவரே அன்றோ? முதலும் முடிவுமாயிருக்கிற ஆண்டவராகிய நாமே இவற்றைச் செய்தோம்.
5. தீவுகள் இவற்றைக் கண்டன, கண்டு அஞ்சின; பூமியின் எல்லைகள் பார்த்துத் திகில் கொண்டன; அருகில் நெருங்கி அணுகி வந்தன.
6. அவனவன் தன் அயலானுக்குத் துணையாய் நிற்பான், "தைரியமாயிரு" என்று தன் சகோதரனுக்குச் சொல்வான்.
7. கன்னான் தட்டானுக்கு ஊக்கமூட்டுவான், சுத்தியால் தட்டுபவன் சம்மட்டியால் அடிப்பவனிடம், பொருந்தும்படி பற்ற வைத்து, "நன்று" என்று சொல்லி உற்சாகப்படுத்துவான்; அசையாதபடி அதை ஆணிகளால் இணைப்பான்.
8. ஆனால் நம் ஊழியனாகிய இஸ்ராயேலே, நாம் தேர்ந்தெடுத்த யாக்கோபே, நம் அன்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே,
9. உலகின் கடைசிப் பகுதிகளிலிருந்து உன்னைக் கூட்டி வந்தோம், தொலைநாடுகளிலிருந்து உன்னை வரவழைத்தோம்; "நீ நம்முடைய ஊழியன்; உன்னைத் தேர்ந்து கொண்டோம், உன்னைத் தள்ளிவிட வில்லை" என்றுனக்குச் சொன்னோம்.
10. நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்; நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்; உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்; நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்.
11. இதோ, உனக்கெதிராய்ப் போர் புரிகிறவர் அனைவரும், வெட்கி நாணிப்போவார்கள்; உன்னுடன் முரண்படும் மனிதரெல்லாம் ஒன்றுமில்லாமையாய் அழிந்து போவார்கள்.
12. உன்னுடைய விரோதிகளை நீ தேடுவாய், ஆனால் அவர்களைக் காணமாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிடுவோர் அழிந்தொழிவார்கள்.
13. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே உன்னுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, "அஞ்சாதே, நாமே உனக்குத் துணையாயிருப்போம்" என்று உன்னிடம் சொல்லுகின்றோம்.
14. புழுவுக்கு நிகரான யாக்கோபே, அற்பமான இஸ்ராயேலே, அஞ்சவேண்டா; நாமே உனக்குத் துணை நிற்போம், என்கிறார் ஆண்டவர், இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர்.
15. புதிய, கூரிய பற்களையுடைய புணையடிக்கும் எந்திரம் போல் உன்னை ஆக்குவோம்; மலைகளை மிதித்து நொறுக்குவாய், குன்றுகளைத் தவிடு பொடியாக்கிடுவாய்.
16. அவற்றை நீ தூற்றுவாய், காற்று அடித்துச் செல்லும், புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அக்களிப்பாய், இஸ்ராயேலின் பரிசுத்தரில் அகமகிழ்வாய்.
17. ஏழைகளும் எளியவரும் தண்ணீர் தேடுகின்றனர், ஆனால் கிடைக்கவில்லை; தாகத்தால் அவர்கள் நாக்கு வறண்டுள்ளது; ஆண்டவராகிய நாம் அவர்கள் மன்றாட்டைக் கேட்போம், இஸ்ராயேலின் கடவுளாகிய நாம் அவர்களைக் கைவிட மாட்டோம்.
18. மொட்டைக் குன்றுகளைப் பிளந்து ஆறுகளையும், பள்ளத் தாக்குகள் நடுவில் ஊற்றுகளையும் புறப்படச் செய்வோம்; பாலை நிலத்தை நீர் நிலைகளாகவும், வறண்ட பூமியை நீரோடைகளாகவும் ஆக்குவோம்.
19. பாலை நிலத்தில் கேதுரு மரங்களையும் வேலமரம், மீர்ச்செடி, ஒலிவ மரங்களையும் உண்டாக்குவோம்; பாழ்வெளியில் தேவதாரு மரங்களையும் புன்னை மரங்களையும் ஊசியிலை மரங்களையும் வைப்போம்.
20. அப்போது, ஆண்டவருடைய கையே இதைச் செய்தது, இஸ்ராயேலின் பரிசுத்தரே இதை உண்டாக்கினார் என்பதை எல்லாரும் பார்த்துத் தெரிந்து கொள்வர், சிந்தித்து ஒருங்கே கண்டுபிடிப்பர்.
21. உங்கள் வழக்கை இப்பொழுது சொல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்; உங்கள் சார்பான சான்றுகளை எடுத்துக் காட்டுங்கள், என்கிறார் யாக்கோபின் மாமன்னர்.
22. அவர்களே வரட்டும், வந்து நடக்கப் போவதை நமக்கு எடுத்துச் சொல்லி அறிவிக்கட்டும்; முன்னே நிகழ்ந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள், நாம் சிந்தித்து அவற்றின் விளைவுகளை அறிந்துகொள்வோம்; அல்லது நிகழப் போவதை நீங்களே நமக்குக் கூறுங்கள்.
23. நீங்கள் தெய்வங்களென நாம் அறியும் பொருட்டு, எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவியுங்கள்; நன்மையோ தீமையோ முடிந்தால் செய்யுங்கள், நாமே பார்த்து ஒருங்கே பேசிக்கொள்வோம்.
24. இதோ, நீங்கள் வெறுமையினின்று புறப்பட்டவர்கள், உங்கள் செயல் ஒன்றுமில்லாமையிலிருந்து செய்யப்பட்டது, உங்களைத் தேர்ந்து கொள்பவன் அருவருப்பானதைச் செய்கிறான்.
25. வடதிசையில் ஒருவனைத் தூண்டி விட்டோம், அவன் கீழ்த்திசையிலிருந்து வருவான்; அவன் நமது திருப்பெயரைப் போற்றுவான், மன்னர்களைச் சேற்றைப் போலும், குயவன் காலால் மிதித்துத் துவைக்கும் களிமண்ணைப் போலும் நடத்துவான்.
26. நாம் அறியும் பொருட்டுத் தொடக்கத்திலிருந்து அறிவித்தவன் யார்? "நீ சொன்னது சரி" என்று நாம் ஒப்புக் கொள்ளும்படி முதலிலிருந்தே கூறியவன் யார்? அவ்வாறு அறிவித்தவனோ, முன்னுரைத்தவனோ யாருமில்லை, உங்கள் சொற்களைக் கேட்டவனோ எவனுமில்லை
27. ஆனால், "இதோ, திரும்பி வருகிறார்கள்" என்று நாம் தாம் முதலில் சீயோனுக்கு அறிவித்தோம்; நற்செய்தித் தூதனை யெருசலேமுக்கு அனுப்பினோம்.
28. நாம் கவனித்துப் பார்த்தோம்; அவர்களுள் ஆலோசனை தருபவனோ, கேள்விக்குப் பதில் சொல்பவனோ இல்லை.
29. இதோ, அவர்கள் அனைவரும் ஒன்றுமில்லை; அவர்களின் செயல்கள் வீணே; அவர்களின் சிலைகள் வெறும் காற்றும் வியர்த்தமும் தான்.

Roman Catholic தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save